வெளியே வந்த ஶ்ரீநிதி தன் அம்மாவிடம் “எனக்கு பசிக்கவில்லை அம்மா…அதனால் கொஞ்சம் மட்டும் சாப்பாடு வைங்க” என்றுவிட்டு சாப்பிட அமர்ந்தாள்.
அவள் அப்படி சொன்னவுடன் கிருஷ்,கீதா மற்றும் ரிஷி எல்லாரும் திகைத்து அவளைப் பார்த்தனர்.ஏனெனில் காரில் வரும்போது ஶ்ரீ “எனக்கு ரொம்ப பசிக்கிறது…வீட்டிற்கு போய் சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டணும்” என்று சொன்னவள் இங்கு வந்து பசிக்கவே இல்லை என்று சொன்னால் எல்லாரும் இப்படி தான் பார்ப்பார்கள்.
ஆனால் ரிஷி கொஞ்சம் முன்னேறி “ஶ்ரீ நீ…” என்று ஆரம்பிக்க போனவனைக் கிருஷ் பார்வையால் அதட்டி சாப்பிட சொன்னான்.அதைப்பார்த்த கீதாவும் எதுவும் சொல்லாமல் சாப்பாட்டை கவனித்தாள்.
அவள் முகமே ஏதோ சரியில்லை என்பதை அறிந்த ஜானகி “என்னம்மா ஏன் ஒரு மாதிரி இருக்கே…??” என்று கேட்டார்.
“ஒண்ணும் இல்லைம்மா…கொஞ்சம் தலைவலிக்கிறது போல் இருக்கும்மா…வேறே ஒண்ணும் இல்லை…என்றவுடன்,
ஜானகி பதறி அவள் கழுத்து தலையைத் தொட்டு பார்த்து சூடு இல்லை என்றவுடன் தான் அப்பா என்று பெருமூச்சை வெளியிட்டு “சரிம்மா…நீ வேலை அதிகமாக செய்ததினால் தலைவலி வந்திருக்கும்…அப்போது சாப்பிட்டு மாத்திரை போட்டு ரெஸ்ட் எடு…எல்லாம் சரியாகிடும்” என்றார்.
“சரி அம்மா” என்றுவிட்டு பெயருக்கு ஏதோ கொறித்துவிட்டு தன் அறைக்கு கீதாவுடன் சென்றாள்.
கிருஷ் தான் மனதிற்குள் இவள் அத்தை அறைக்குள் போகும் போது நல்லா தானே இருந்தாள்…ஆனால் திரும்பி வரும்போது அவள் முகமே சரியில்லையே…என்னாச்சு என்று யோசித்துவிட்டு அத்தை ஏதாவது ஶ்ரீநிதியைத் திட்டி இருப்பாங்களோ? என்று நினைத்து சரி அவளிடம் நாளைக்கு கேட்டு கொள்ளலாம் என்று தூங்குவதற்காக தன் மெத்தையில் விழுந்தான்.
படுத்திருந்தனே ஒழிய அவனுக்கு தூக்கமே வரவில்லை…வரும் போது நல்லாதானே இருந்தாள்…இப்போது என்னச்சு…என்று யோசித்துவிட்டு என்ன இருந்தாலும்…எப்போது என்னை இந்த குண்டச்சி விரும்ப ஆரம்பித்தளோ…அப்பவே நீ தான் என் பொண்டாட்டினு நான் முடிவு பண்ணிட்டேன்… அதனால் இனிமே நீ எதற்கும் கலங்கக்கூடாது… கலங்கவும் விடமாட்டேன் என்று அவனுக்கு அவனே உறுதியளித்தான்.
அன்றைய இரவில் படுப்பதற்கு முன்…கீதா ஶ்ரீநிதியின் முகத்தைப் பார்த்து…ஏதோ சரியில்லை என்று நினைத்து…அவளிடம் பேச எண்ணி… ஒருமுறை வாணி நன்றாக தூங்கிவிட்டளா என்பதை உறுதிப்படுத்தி கொண்டு…ஶ்ரீநிதியிடம் “ஶ்ரீ ஒரு ஐந்து நிமிடம் உன்கூட பேசணும்…கொஞ்சம் முக்கியமான விசயம்டி…பால்கனிக்கு வரியா…??” என்று தீவரமான முக பாவனையுடன் கேட்டாள்.
ஶ்ரீயும் அவளின் தீவர முகப்பாவத்தைப் பார்த்து “ஒரு 5 மினிட்ஸ்டி…நான் ஃபிரஸ் அப்பாகிட்டு வரேன்” என்று அவள் அறையில் உள்ள அட்டாச்டு பாத்ரூமிற்குள் நுழைந்தாள்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் இருவரும் பால்கனியில் நின்று இருந்தனர்.
ஆனால் இருவரும் எதுவும் பேசாமல் அங்கிருந்த நிலவைப் பார்த்து கொண்டிருந்தனர்.
முதலில் ஶ்ரீ தான் “கீதா ஏதோ முக்கியமான விசயம் பேசணும்னு சொல்லிட்டு…வந்ததிலிருந்து வானத்தையே பார்த்திட்டு இருக்கே…??” என்று கீதாவைப் பார்த்து கேட்டாள்.
கீதா ஶ்ரீயைத் திரும்பி பார்த்து எதுவும் பேசாமல் அவளின் கண்களை மட்டும் பார்த்து கொண்டிருந்தாள்.அது ஒரு குற்றம் சாட்டும் பார்வை என்று ஶ்ரீநிதிக்கு புரிந்தது.
அதனால் அவளின் பார்வையின் வீச்சைத் தாங்க முடியாமல் “என்னடி ஏதோ பேசணும்னு சொல்லிட்டு வந்து ஒண்ணும் பேசாமல் இருக்கே…??” என்று வினவினாள்.
“இத்தனை நாளாக என் பிரண்ட் என்னிடம் இருந்து எதுவும் மறைக்கமாட்டாள்னு நினைச்சேன்…ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்று நீ எனக்கு புரியவச்சிட்டேடி…!!” என்று ஒரு மாதிரியான குரலில் கூறினாள்.
அதில் ஶ்ரீநிதி தடுமாறி “அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லைடி…நான் உன்கிட்ட இருந்து எதுவும் மறைக்கலைடி…நீ எதை பற்றி பேசுறேனு எனக்கு புரியலைடி” என்று சொல்லும் போதே அவளிடம் ஒரு உண்மையைப் பேசும் உறுதி இல்லை என்பதை கீதா கவனித்தாள்.
அதைக்கவனித்த கீதா ஒரு வருத்தமான முறுவலுடன் “சரி…நீ சொல்லுவதும் சொல்லாததும் உன் விருப்பம்…ஆனால் என் பிரண்ட் நல்லாதுக்காக கடைசியாக ஒரு அட்வைஸ் சொல்லிறேன்…அதைக் கேட்பதும் கேட்கக்காததும் உன் விருப்பம்…என்று விட்டு,
ஶ்ரீ ஏதோ சொல்லவருவதைப் பார்த்து அவளை “ஒரு நிமிடம் இரு…நான் சொல்லி முடித்துவிடுறேன்…நீ ரமேஷிடம் கிருஷ் அண்ணாவை காதலிக்கறதைப் பற்றி சொல்லிவிடுவது பெட்டர்…ஏனெனில் இன்னோருத்தர் என் தோழியை நினைத்து தன்னுடைய வாழ்க்கையை அழித்துக் கொள்வது எனக்கு பிடிக்கவில்லை…என் தோழி எப்போதும்…எல்லாருக்கும் நல்லது தான் செய்வாள்” என்று முடித்துவிட்டு தான் வந்த வேலை முடிந்தது என்பது போல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தவளை ஶ்ரீநிதி தவிப்புடன் பிடித்து இழுத்தாள்.
ஶ்ரீநிதி கண்களில் கண்ணீருடன் “சாரிடி கீதா…நான் உன்னிடம் மறைக்கணும்னு மறைக்கலைடி…எனக்கே…இது சரிவர தெரியாத போது உன்னிடம் எப்படிடி சொல்ல முடியும்” என்றாள்.
எப்போதும் சிரித்து கொண்டிருக்கும் தன் தோழியின் கண்களில் கண்ணீரைப் பார்த்ததும் அவளை இழுத்து அணைத்து ஆறுதல் படுத்தியவாறு “உனக்கு என்ன சரிவர புரியவில்லை…??” என்று கேட்டாள்.
அவள் அணைப்பில் இருந்தவாறே “அவரைப் பார்த்தாலே ஒரு படப்படப்பு வருதுடி…அவர் கண்களைப் பார்த்தால் பார்த்துகொண்டே இருக்கணும் போல இருக்குடி…அவர் சிரிக்கும் போது விழும் அந்த கன்னகுழி அழகில் நான் அந்த குழியில் விழந்து விடமாட்டேனா…?? என்று இருக்கிறதுடி…!!ஆனால் இதுக்கு பெயர் காதலா…இல்லை ஈர்ப்பானு…?என்று கண்களில் கனவு மின்ன கூறி,
ஆனால் முடிவில் ஆதங்கத்துடன் “எனக்கே இது முழுதாக புரியவில்லை…இந்த லட்சணத்தில் நான் வந்து உன்னிடம் என்னவென்று சொல்லுவது…?” என்று அவள் அணைப்பிலிருந்து வெளிவந்தவாறு கூறினாள்.
“இது காதல் என்று தெரியாத போதே இப்படி ரொமென்ஸ்னா…அப்போ காதல்னு தெரிஞ்சா அவ்வளவு தான் நாங்க…எல்லோரும் தண்ணீரில் தான் நீந்தணும்” என்று சூழ்நிலையை மாற்றினாள்.
அதற்கு தகுந்த மாதிரி ஶ்ரீ வெட்கத்தில் சிவந்த முகத்துடன் “ச்சு போடி” என்று சிணுங்கினாள்.
தீடிரென்று கீதா “ஐய்யையோ…!” என்று அலறினாள்.
இவள் அலறலைக் கேட்டு “என்னச்சுடி கீது” என்று பதறினாள்.
கீதா “இல்லை…நைட் நான் எப்படி உன் பக்கத்தில் தூங்கிறதுனு யோசித்து பார்த்து அலறினேன்…என்றவளை இதில் என்ன இருக்கு என்று ஶ்ரீ புரியாமல் பார்த்தாள்.அவளை அலட்சியம் செய்துவிட்டு,
கீதா “நீ பாட்டுக்கு கிருஷ் அண்ணானு நினைச்சி என்னை ஏதாவது பண்ணிட்டினால்…அப்புறம் எனக்கு யார் பாதுகாப்பு…??அதை நினைச்சுப்பார்த்து அலறினேன்” என்று சிரியாமல் கூறியவளைப் பார்த்து ஶ்ரீநிதி நன்றாக முறைத்துவிட்டு,
“ஏய் எருமை…!!உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை…எனக்கு அத்தான் என்னை காதலிக்கிறாரா இல்லையானே தெரியலை…இதில் நீ வேறே போடி லூசு” என்று திட்டினாள்.
கீதா உறுதியாக “கிருஷ் அண்ணா…உன்னை காதலிக்கிறாங்க…நான் அதை உறுதியாக சொல்லுகிறேன்…” என்றாள்.
“அது எப்படிடி சொல்லுறே…??”
“கிருஷ் அண்ணா உன்னை பார்க்கிறே பார்வையில் ஒரு காதல் இருக்குடி…அதுமட்டுமில்லாமல் உன்னை அதட்டும் போதும் சரி…திட்டும் போதும் சரி…உன் மூகம் கொஞ்சம் மாறினாலும் அதைப் பார்த்து அதற்கு தகுந்த மாதிரி நடக்கும் போதும் சரி…அவர் உன்னை ரசிக்கும்போதும் சரி…அவர் கண்களில் காதல் தெரியும்…அவர் திட்டும் போது நீ எனக்கானவள்…உன்னை திட்டும் உரிமை எனக்கு இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லும் அவர் நடவடிக்கை” என்று நீளமாக எடுத்துரைத்தாள்.
ஶ்ரீதான் இவளை ஆவென்று பார்த்து கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்த கீதா அவள் வாயை கையால் மூடிவிட்டு சிரிப்புடனே “சரி…உங்க அப்பாயி என்ன சொன்னாங்கடி…?” என்று கேட்டாள்.
உடனே ஶ்ரீநிதியின் முகம் மாறியது.கீதா மறுபடியும் “என்னடி…??” என்று வினவினாள்.
ஶ்ரீநிதி மெதுவான குரலில் “டெல்லியில் ஜே.கே காலேஜ் பத்தி கேள்விப்பட்டு இருக்கே தானே…??” என்று கேட்டவுடன்,
கீதா ஆர்வமாக “அதுவா ரொம்ப பெரிய காலேஜ்டி அது…அதில் சீட் கிடைச்சவாங்க ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணிருக்கணும்…ஆமாம் நீ ஏன் அதைப் பற்றி கேட்கிறே…” என்று வினவினாள்.
“எனக்கு அதில் அட்மிஷன் கிடைச்சிருக்கு…அப்பாயி அதை எனக்கு பிறந்தநாள் பரிசாக வாங்கி கொடுத்திருக்காங்க…” என்று சுரத்தேயில்லாமல் கூறினாள்.
அவள் சொன்ன விசயத்தைக் கேட்டவுடன் “வாவ்!!சூப்பர்டி கை கொடுடி” என்றவாறு அவள் கையைப் பிடித்து குலுக்கினாள்.
ச்சு என்று சலித்தாள் ஶ்ரீ.அதன்பிறகு தான் கீதா அவள் முகத்தைப் பார்த்து ஏதோ சரியில்லை என்று புரிந்து “என்னச்சுடி” என்று வினவினாள்.
ஶ்ரீநிதி வருத்தமாக “அப்பா அம்மா…உன்னை…வாணி…ரிஷி… அப்புறம் இந்த குடும்பத்தை… எல்லாரையும் விட்டுவிட்டு எப்படிடி நான் மட்டும் தனியாக போய் இருக்க முடியும்…அதை நினைச்சாதான்… வருத்தமாக இருக்கு” என்றாள்.
கீதா அவளைச் சந்தேகமாகப் பார்த்து “நீ எங்க எல்லாரையும் விட்டு பிரிந்து போவதற்கு வருத்தப்படற மாதிரி தெரியலை…கிருஷ் அண்ணாவை விட்டு பிரிந்து போவதற்கு தான்…வருத்தப்படற மாதிரி இருக்கு” என்று உண்மையைப் போட்டு உடைத்தாள்.
ஶ்ரீநிதி அவசரமாக “அப்படியெல்லாம் இல்லை” என்று சொன்ன தினுசிலே அப்படிதான் என்பது தெளிவாக தெரிந்தது.
கீதா இன்னும் அவளை உற்று பார்க்கவும் ஶ்ரீநிதிக்கு கண்களில் கண்ணீரே வர ஆரம்பித்தது.
“லூசு…எதற்கு இப்போ அழுகறே…ஒரு வருடம் தான்டி…சொடக்கு போடறதுகுள்ள போய்விடும்டி…அப்புறம் கல்யாணம் தான்…டும்டும்டும் தான்…” என்று அவளைக் கலகலப்பாக முனைந்தாள்.
ஶ்ரீயும் கண்ணீருடனே “போடி” என்று வெட்கச் சிரிப்புடன் உள்ளே நுழைந்தாள்.
அவளைப் பார்த்த கீதா தன் தோழி இதே மகிழ்ச்சியுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனைச் செய்துவிட்டு அவளும் தூங்கப் போனாள்.
இவர்கள் பேசுவதை இன்னும் இருவர் கேட்டு கொண்டிருந்தனர்.
அதில் ஒருவர் மகிழ்ச்சியுடனும்…இன்னொருவர் வன்மத்துடன் கேட்டதை கீதாவும் ஶ்ரீநிதியும் அறியவில்லை.
அதனால் அடுத்தநாள் இருவரின் காதலைச் சோதிப்பதைப் போல் ஒரு நிகழ்ச்சி நடக்கப்போவதை இருவரும் அறியாமல் தன் கனவுகளில் சஞ்சரிக்க ஆரம்பித்தார்கள்.