அத்தியாயம் 14

தன் தோழியின் அழகை ரசித்துவிட்டு அவளை எழுப்பி கட்டியணைத்து “ஏய்…செம்ம அழகாக இருக்கடி…நான் மட்டும் ஆம்பிளையாக இருந்தேன்…உன்னை இந்நேரம் கடத்தி கொண்டு போய் தாலிக் கட்டிருப்பேன்” என்று கூறி அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“ஏய்…ச்சீ போடி…” என்று அவளைத் தள்ளிவிட்டாள்.

கீதாவும் விடாமல் அவளைக் கிண்டல் செய்து “உனக்கு இந்த புடவை ரொம்ப அழகாகப் பொருந்தி இருக்குடி…இது யார் வாங்கி கொடுத்ததுடி…உன்னை கட்டிக்க போறவன் கொடுத்து வைத்தவன்டி” என்றாள்.

அவள் அப்படி கூறவும் அவள் கண் முன்னால் வந்தது கிருஷ் தான்…இருந்தாலும் அதனை ஒதுக்கிய ஶ்ரீநிதி ‘எனக்கே தெரியாது’ என்பதைப் போல் உதட்டைப் பிதுக்கினாள்.

கீதா திகைத்து “என்னது உனக்கு தெரியாதா…??அப்புறம் ஏன்டி இதைக் கட்டி இருக்கே…??” என்று கேட்டாள்.

“கண்டிப்பாக யாரவது…எங்க குடும்பத்தில் தான் எனக்காக ஆசையாக வாங்கியிருப்பாங்க…அதனால் தான்டி நான் இதையெல்லாம் போட்டேன்” என்றவாறு தான் அணிந்தவற்றைக் கைகளால் காண்பித்தாள்.

அதன்பிறகு இருவரும் சேர்ந்து தாத்தாவின் அறைக்கு சென்று ஶ்ரீ மட்டும் தாத்தா பாட்டி இருவரிடமும் ஆசிர்வாதம் வாங்கினாள்.

நூறு வருடம் நல்ல இரும்மா என்று இருவரும் ஆசிர்வாதம் செய்தார்கள்.

பாட்டி மட்டும் “இந்த புடவை யாரு எடுத்தா…உனக்கு ரொம்ப லட்சணமா இருக்கு தாயி…அப்படியே நான் கும்பிடுறே கண்ணணோட ராதை மாதிரியே இருக்கே…அம்மாடி…” என்று கூறி திருஷ்டி கழித்தார்.

ஶ்ரீ குறும்புடன் “ராது நீ எப்பவும் போல சிறுக்கினு சொல்லு…உனக்கு இந்த தாயி அம்மாடி எல்லாம் ஒத்துவரலை…ஏதோ சிரியல் பாட்டி மாதிரி இருக்கு…!!” என்றாள் சிரிப்புடன்.

அதைக்கேட்டவுடனே தாத்தாவும் கீதாவும் சிரித்தார்கள்.பாட்டி அவள் தன்னை கிண்டல் செய்ததைப் பொறுக்கமுடியாமல் “போடி…கூறு கெட்டவளே…!ஏதோ இன்னைக்கு பொறந்த நாளாச்சேனு…உன்னை திட்ட வேண்டாம்னு…நான் சிவனேனு இருந்தால் என்னைத் துண்டிவிடுறியா சிறுக்கி…??உன்னையெல்லாம் அடக்க ஒரு மவராசன் வருவான்டி…அவனிடம் நீ சிக்கறதைப் பார்க்கதானே போகிறேன்” என்று அவளை வைது கொண்டிருக்கும் வேளையில் கிருஷும் அவன்கூடவே அவனுடைய தந்தை தனநந்தனும் அம்மா தேவகியும் நுழைந்தார்கள்.

பாட்டி ஶ்ரீயிடம் “பாரு உன்னை அடக்க என் பேராண்டி வந்திட்டான்…உனக்கு தைரியம் இருந்தால் இப்போ பேசு” என்றார்.

கிருஷைப் பார்த்தவுடன் ஒரு வித தயக்கம் சூழ ஶ்ரீநிதி அமைதியைத் தத்தெடுத்தாள்.ஆனால் அவன் அவளை நெருங்க நெருங்க உள்ளே இரயில் தடத்தடத்தது.அதுமட்டுமில்லாமல் இன்று நடந்த நிகழ்வு வேறே மனதில் வந்து தொலைந்து அவளின் உடலைச் சூடாக்கி…கன்னத்தை…அவளின் புடவை நிறத்திற்கு நிகராக சிவக்க செய்தது.

அந்த கன்னச்சிவப்பையும் அவளின் அழகையும் ரசித்து கொண்டே அவளை ஆசையிடன் நெருங்கினான்.அவனுக்கும் இந்த நேரத்தில் அவள் அறையில் அவளைப் பார்த்தது ஞாபகம் வர அவளை ஒரே பார்வையில் விழுங்கிவிடுபவன் போல் பார்த்தான்.

இவர்களின் பார்வையை கீதாவும் தாத்தாவும் கவனிக்கத் தவறவில்லை…அதன்பிறகு தான்…நாம் பொது இடத்தில் இருக்கிறோம் என்று புரிந்து இருவரும் தங்கள் எண்ணத்தை மாற்றி…உணர்ச்சியை வேலிப்போட்டு தடுத்தார்கள்.

ஶ்ரீயும் தன் கால் கட்டைவிரலை தரையில் அழுத்தி கன்னச்சிவப்பை போக்கினாள்.கிருஷ் அவள் அருகில் நெருங்கி “பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று அவள் கண்களைப் பார்த்து கூறினான்.

ஶ்ரீ தன் இமைகளைத் தழைத்து “தேங்கஸ் அத்தான்” என்றாள்.

அவன் அருகில் உள்ள தனது சின்ன தாத்தா அம்மம்மா காலில் விழுந்து வணங்கினாள்.

இருவரும் ‘நல்லா இரும்மா…’ என்று வாழ்த்திவிட்டு இந்தம்மா என்றவாறு அவள் கையில் ஒரு பார்சலைத் தந்தார்கள்.

அதை மகிழ்ச்சியுடன் வாங்கிவிட்டு “இது என்னது சின்ன அம்மு…??” என்றாள் தேவகியைப் பார்த்து.சின்ன அம்மம்மாவைச் சுருக்கி சின்ன அம்மு என்றாள் ஶ்ரீ.

“பிரிச்சிப் பாரு…அப்போ தானே தெரியும்” என்று பழையப்படி அதட்டினான் கிருஷ்.

அவன் கோபப்படுவதைப் பார்த்து அவசரமாக அதைப் பிரித்தாள்.அதில் இருந்தது ஒரு வைரத் தோடு அதைப் பார்த்து அவள் மகிழ்ச்சியுடன் “தேங்கஸ் சின்ன அம்மு…தேங்கஸ் தனா தாத்தா…ரொம்ப அழகாக இருக்கு” என்று கூறி தேவகி கன்னத்தில் முத்தமிட்டாள்.

அவர் இவளைக் கட்டியணைத்துவாறு “நீ இந்த புடவையில் ரொம்ப அழகாக இருக்கே…யாரு எடுத்தது ஶ்ரீம்மா…??” என்று கேட்டார்.

அவள் தெரியலைனு பதில் சொல்வதற்குள் கிருஷ் “ஶ்ரீநிதி பெரியம்மா பெரியப்பாவிடம் ஆசிர்வாதம் வாங்கிட்டியா…??” என்று கேட்டான்.

அதை தாத்தா நன்றாக கவனித்தார். ‘இந்த பையன் ஏதோ பண்ணி இருக்கான் போலவே…என்னனு விசாரிப்போம்…?’ என்று மனதில் எண்ணினார்.

கிருஷ் கேட்ட கேள்விக்கு இல்லை என்பது போல் தலையாட்டினாள்.கிருஷ் உடனே “அப்போ அங்க போய் ஆசிர்வாதம் வாங்கு…இங்கு எதுக்கு சும்மா நின்னுட்டு இருக்கே…!!” என்று அவளைக் கிளப்பினான்.

அனைவரும் சென்றபிறகு தாத்தாவும் கிருஷூம் மட்டுமே அந்த அறையில் இருந்தனர்.

தாத்தா கிருஷிடம் எதுவும் பேசாமல் அவனையே கண்யெடுக்காமல் பார்த்துகொண்டு இருந்தார்.

அந்த பார்வையின் அர்த்தம் உணர்ந்த கிருஷ் எதுவும் தெரியாதது போல் “என்ன தாத்தா…எதுக்கு அப்படி என்னைப் பார்க்கறீங்க…??” என்று கம்பீரமாக கேட்டான்.

தாத்தா தன் பேரனின் சாமர்த்தியத்தைப் பார்த்து புன்னகையுடன் “உண்மை சொல்லு கிருஷ்…நீ ஏதோ பண்ணியிருக்கே தானே” என்று கேட்டார்.

கிருஷ் வேண்டுமென்றே “என்னது தாத்தா…நீங்க என்ன கேட்கிறீங்கனு புரியலை தாத்தா…??” என்று புரியாமல் கேட்பது போல் வினவினான்.

‘டேய்…!!நான் உனக்கு தாத்தாடா…!’ என்பது போல் பிடிவாதத்துடன்… அவரும் ‘நீ என்னவென்று சொல்லாமல் இங்கிருந்து உன்னை நகர விடமாட்டேன்’ என்று கிருஷைப் பார்த்து கொண்டியிருந்தார்.

அவனும் அவரைப் பார்த்து பிடிவாதத்துடன் “என்ன தாத்தா…??” என்றவாறு ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினான்.

இப்போ நீ சொல்லப் போறியா…இல்லையா…?? என்று தாத்தாவும் எதிர் பார்வைப் பார்த்து கொண்டிருந்தார்.

சிறிதுநேரம் இப்படியே அமைதியாக சென்றது.அதன்பிறகு கிருஷ் என்ன நினைத்தனோ அங்கிருந்து எழுந்தவாறு “தாத்தா…நான் தான் அந்த புடவையை ஶ்ரீக்கு கிப்ட் பண்ணேன்…யாரவது கேட்டால் நீங்க தான் தந்தீங்கனு சொல்லிவிடுங்கள்…அப்புறம் வேற எதுவும் இப்போ கேட்காதீங்க…இப்போது அதைப்பற்றி சொல்லுவதற்கான நேரம் இது இல்லை” என்று ஒரு தீர்மானத்துடன் கூறி அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.

ஶ்ரீநிதி தனது தோழி கீதாவை வாணியிடம் விட்டுவிட்டு…ஶ்ரீ தனது அப்பா அம்மாவைப் பார்த்து பேசி ஆசிர்வாதம் வாங்கிவிட்டு அதன்பிறகு தன் ரகு தாத்தா மற்றும் யசோதா அம்மம்மாவைப் பார்த்து அவர்களிடமும் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு குந்தவையைப் பார்க்கப்போனாள்.

அவரின் காலில் விழுந்தவுடன் “நல்லா இரு” என்றுவிட்டு வேற எதுவும் சொல்லவில்லை குந்தவை.அவர் அப்படி செய்தததால் ஶ்ரீயின் மூகம் சுருங்கியது.

அதே வருத்தத்துடன்…அவளின் பெரியப்பா ராமிடம் ஆசிர்வாதம் வாங்கினாள்.அவர் அவள் முகத்தைப் பார்த்து “நல்ல இரும்மா…”என்றுவிட்டு,

“ஏன்ம்மா…உன் முகம் ஒரு மாதிரி இருக்கு…இன்றைக்கு உனக்கு பிறந்தநாள் ஶ்ரீம்மா…அதனால் இப்படி இருக்கக்கூடாது…சிரிம்மா” என்றவுடன்,

அவள் முகத்தில் புன்னகை மலர்ந்தது .‘இந்த புடவையில் நீ ரொம்ப அழகாக இருக்கே…இதுபோல் எப்பவும் நீ சிரிச்சிட்டு தான் இருக்கணும் புரியுதா…??” என்று கூறி அவள் தலையைத் தடவி அவளுக்கு ஒரு பரிசு கொடுத்தார்.

“தேங்கஸ் பெரியப்பா” என்று புன்னகையுடன் கூறி அவள் பெரியம்மாவைக் கண்களால் துழவினாள்.

அவள் தேடுவதைப் பார்த்து “ஜோதியைத் தேடிறீயா…??” என்று கேட்டார்.

“ஆமாம் பெரியப்பா”

“அவள் அவங்க அம்மா வீட்டில் ஏதோ விஷேசம்னு அங்கே  போயிருக்காள்” என்றவுடன்,

“சரி பெரியப்பா” என்று அந்த அறையைவிட்டு வெளியேறினாள்.அவள் அறைக்கு சென்றவளுக்கு ‘இந்த புடவை யார் கொடுத்தா…என்று குழப்பத்துடன் இருந்தாள்.எல்லாருமே யார் கொடுத்தாங்க அழகாக இருக்குனு கேட்கிறாங்க…அப்போ இதை யார் தான்…இந்த அறையில் வைச்சா…!!’ மண்டையைப் பிய்த்து கொள்ளலாம் போல் என்று குழப்பத்துடன் கட்டிலில் அமர்ந்தவள் அருகில் உட்கார்ந்தது ரிஷி.

ஶ்ரீ அவனை ஏறிட்டு பார்க்க ரிஷி “என்னாச்சு ஏன் ஒரு மாதிரியாக இருக்கே…??” என்று கேட்டான்.

ஶ்ரீ சஞ்சலத்துடன் தன் புடவை நகைகளைக் காட்டி “இது யார் வாங்கி கொடுத்தாங்கனு தெரியல ரிஷி… என்றவாறு எல்லோரும் அவளிடம் கேட்டதைப் பற்றி சொன்னாள்.

“அவ்வளவு தான் விசயமா…??நான் கூட என்னவோ ஏதோனு பயந்திட்டேன்…” என்று கூறி சிரித்தான்.

ஶ்ரீ முகத்தில் வெளிச்சம் பரவ “அப்போ உனக்கு இது யார் கொடுத்தனு தெரியுமா…??” என்று கேட்டாள்.

ரிஷி ஶ்ரீயின் கையில் கிள்ளி “மண்டு…மண்டு உனக்கு இது கூட புரியலை…??நம்ப வீட்டில் இவ்வளவு விலையில் கிப்ட் வாங்கக்கூடியவர்கள் எல்லாரும் உன்னிடம் இது யார் வாங்கி கொடுத்தாங்கனு கேட்டார்கள் தானே…ஆனால் இதில் ஒருவர் மட்டும் உன்னிடம் கேட்கலை…அது யாரு…??” என்று புத்திசாலி தனமாக கேட்டான்.

யாரு கேட்கலை என்று முகத்தைச் சுருக்கி யோசித்து பார்த்தவளின் முகத்தில் ஒளிப்பரவ “ஹய் கண்டுப்பிடிச்சிடேன்…” என்றவாறு கட்டிலில் இருந்து துள்ளி குதித்து எழுந்தவள் “நீ தானே…!!” என்று ரிஷியைக் காட்டினாள்.

“ச்சு…உனக்கு மூளையே இல்லை…நானே இப்போ தான் ஆபிஸ் வரேன்…என் கையில் எப்படி இவ்வளவு காசு இருக்கும்” என்று அவளைத் திட்டினான்.

ஶ்ரீநிதி ரொம்ப நேரம் யோசித்துப் பார்த்து “தெரியலைடா ரிஷி…!!” என்றாள் பாவமாக.

ரிஷி இது தான் சாக்கு என்று “நீ கண்டிப்பாக மர மண்டை தான்” என்று திட்டிவிட்டு “கிருஷ்அண்ணா தான்…வாங்கிருப்பாங்க லூசு” என்றான்.

ஓ என்றவளின் மனதில் ஒரு வித இதம் பரவுவதை உணர்ந்தாள்.

ரிஷி சென்றபிறகு கிருஷ்அத்தான் தான் இதை வாங்கி இருப்பாங்க…அவரால் மட்டும் தான் இவ்வளவு அழகாக தேர்ந்தெடுக்க முடியும்…இதை ஏன் நான் முன்னாடியே யோசிக்கவில்லை என்று நினைத்து அந்த புடவையோடு தன்னை கண்ணாடியில் பார்த்தவள்… தன் அழகினைக் கண்ணாடியில் பார்த்து பிரம்மித்தாள்.நாம் இவ்வளவு அழகா..?? என்று பார்த்தவளின் முகத்தில் வெட்கத்தின் சாயல் தோன்றியது.

புடவைக்கட்டும் போது நடந்த நிகழ்வை நினைத்தவளின் முகம் சுருங்கியது…கிருஷ் அத்தான் தன்னை தப்பாக நினைத்திருப்பாரா…?? தப்பாக நினைத்தால் என்னிடம் பேசியிருக்கவே மாட்டாரே…??அப்புறம் காலையில் அப்படி பார்த்தாரே கோபம் இருந்தவரால் எப்படி அப்படி பார்க்கமுடியும் என்று அவளுக்கு அவளே பதில் தந்தப்பிறகு தான் அவளின் முகம் தெளிந்தது. தெளிந்தவுடன் மறுபடியும் வெட்கம் சூழ்ந்தது…அவளின் முகத்தை கண்ணாடியில் பார்க்க முடியாமல் அவள் முகத்தை அவள் கைகளால் மூடினாள்.

மூடிவிட்டு ‘உனக்கு கொஞ்சம் கூட விவஸ்த்தையில்லைடி…எப்போ மூடணுமோ…அப்போ மூடாமல் இப்போ வந்து முகத்தை மூடிட்டு இருக்கே லூசு…’ என்று கண்ணாடியில் அவளைப் பார்த்து அவளே திட்டிகொண்டிருக்கும்போது கீதா அந்த அறைக்குள் நுழைந்தாள்.

ஶ்ரீ தனியாக பேசி கொண்டிருப்பதைப் பார்த்து ‘ஐய்யையே இவள் என்ன தனியாக கண்ணாடி முன்னாடி நின்னு பேசிட்டு இருக்காள்…என்னச்சு இவளுக்கு கிறுக்கு ஏதாவது புடிச்சிருச்சா…??’ என்று யோசித்துவிட்டு இனிமே இவள் கூட தனியாக இருப்பது ஆபத்து…! நாம் வாணிக்கிட்டயே போவோம் என்று அங்கிருந்து திரும்பி நடந்தாள்.

இங்கே கிருஷ் தன் படுக்கையில் படுத்திருந்தப்படியே காலையில் நடந்ததை நினைத்து கொண்டிருந்தான்…திரும்ப திரும்ப அவளின் எழில் வளைவுகளே அவன் நினைவுக்கு வந்தது…அதுவும் அவள் இடுப்பில் இருந்த மச்சம் ரொம்பவும் தொந்தரவு பண்ணியது கிருஷை…அதிலிருந்து வெளிவர ரொம்பவும் போராடினான்…என்னச்சு எனக்கு…இப்போதெல்லாம் உன்னை நினைக்கிறதே இல்லை குண்டச்சி… எப்பவுமே இந்த ஶ்ரீநிதி தான் மனசில் இருக்காள்… சாரிம்மா…எனக்கு நீ தான் முக்கியம்…நீ மட்டும் தான் எனக்குவேணும் குண்டச்சி என்று கூறி அந்த ஃபோட்டோவிற்கு முத்தம் கொடுத்தான்…அப்படியே குண்டச்சியுடன் முதன்முதலில் காதலில் விழுந்த கதையை யோசித்தவாறு பழைய நினைவுகளில் ஆழ்ந்தான்.

சில வருடங்களுக்கு முன்,இந்த வீடு வண்ண வண்ண விளக்குகளாலும்,தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

வீடு முழுவதும் ஆட்களுடன்…எங்க பார்த்தாலும் குழந்தைகள் சத்தத்துடனும்…எங்கு பார்த்தாலும் பட்டு சேலை சரசரக்க வந்த பெண்களின் சலசலப்புடணும்…ஒரே மல்லிகை பூக்களின் மணத்துடனும்…அந்த வீடே அல்லோலாப்பட்டு கொண்டு இருந்தது.

இருபது வயது வாலிப்பனான கிருஷ் ஒரு அறையில் அடங்கியப்படி…இதை எல்லாம் பார்த்து எரிச்சலடைந்து கொண்டு இருந்தான்…ஆம் இது ஒரு மஞ்சள் நீராட்டுவிழா…அதனால் தான் வீடு முழுவதும் வெறும் பெண்களே சுற்றி கொண்டு இருந்தனர்… கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் தன்னை கட்டாயப்படுத்தி இங்கு வரவழைத்த தன் தாயை நன்றாக அர்ச்சனைச் செய்து கொண்டு இருந்தான்.

தன் அறையின் கதவை யாரோ தட்டுவதைக் கேட்டு எரிச்சலுடன் வேகமாக கதவைத் திறந்தான்…வெளியே தன் பெரியம்மா யசோதா நிற்பதைப் பார்த்த கிருஷின் மூகம் எரிச்சலில் இருந்து மாறி ஒரு புன்னகையைப் பூசியது.

கிருஷ் புன்னகையுடன் சற்று தள்ளி நின்று அந்த அறைக்குள் தன் பெரியம்மாவிற்கு வழிவிட்டான்.

அவரும் உள்ளே வந்து கதவைத் தாளிட்டுவிட்டு அவன் கையைப் பிடித்து “சாரிப்பா கிருஷ்…தயாவால் இந்த விழாவுக்கு வரமுடியவில்லை…அதனால் தான்ப்பா உன்னை வரவழைக்க வேண்டியதாகப் போய்விட்டது…எங்களுக்கு வேற வழியில்லைப்பா…நீ எரிச்சலாக இருப்பதாக உன் அம்மா தான் சொன்னாள்…அதனால் மனசு கேட்காமல் உன்னிடம் மன்னிப்பு கேட்கலாம்னு வந்தேன்” என்றார் கவலைப்படிந்த முகத்துடன் தயங்கியபடியே.

அவர் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்தப்படியே “பெரியம்மா இங்க பாருங்க…நான் எரிச்சலாக இருந்தது உண்மைதான் ஆனால் என் பெரியம்மா வந்த உடனே என் கோபம் எல்லாம் போயிடுச்சு… இப்போ இந்த கிருஷ் தன் பெரியம்மாக்காக என்ன வேணாலும் செய்வான்…இப்போ உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்கள்” என்றான் சிறு புன்னகையுடன்.

“நீ பெருசாக ஒண்ணும் செய்ய வேணாம்ப்பா…ஒரு அரை மணி நேரம் கீழே வந்து நான் சொன்னதைச் செய்தால் போதும்ப்பா…!!” என்றார்.

“சரிங்க பெரியம்மா…நீங்க என்ன சொல்லுறீங்களோ…அதுமாதிரியே செய்கிறேன்…போதுமா…??இப்பவாச்சும் கொஞ்சம் சிரிங்களேன்” என்று தன் பெரியம்மாவிற்கு கிச்சிகிச்சு மூட்டி சிரிக்க வைத்தான்.

“போதும் விடுப்பா…நீ சீக்கிரம் கீழே இறங்கி வா…” என்று சிரிப்புடன் அந்த இடத்தைவிட்டு வெளியேறினார்.

இதுவரை பெரியம்மாவிற்காக சிரிப்புடன் வைத்திருந்த தன் முகத்தை எரிச்சலாக மாற்றினான்.அந்த எரிச்சல் முழுவதும் இதற்கு காரணமானவளின் மேல் விழுந்தது. ‘இந்த குண்டச்சியை யாராவது இப்போ பெரிய மனிசியாக சொல்லி வெற்றிலைப் பாக்கு வைச்சி அழைச்சாங்களா…குண்டச்சி நல்லா சாப்பிட வேண்டியது…தூங்க வேண்டியது…அப்புறம் இப்படி தான் 12 வயதிலே பெரிய மனிசி ஆகணும்…குண்டச்சி…குண்டச்சி’ என்று அவளை நன்றாக வைதான்.

சிறிது நேரம் கழித்து கீழே வந்த கிருஷ் அவர்கள் சொன்னதை எல்லாம் கடமையே என்று செய்து கொண்டிருந்தான்.அப்பவும் யாரை இவ்வளவு நேரம் திட்டினானோ அவளைக் கண்டு கொள்ளவே இல்லை…

அப்போது அவன் பெரியம்மா “கிருஷ் அவளின் நெற்றியில் பொட்டு வைத்து மாலைப்போடுப்பா…” என்றவுடன்,

எரிச்சலுடன் பொட்டு வைக்க கை உயர்த்தி அவளைப் பார்த்தவன் அதிர்ந்தான்.

அதற்குள் கதவு தட்டும் சத்தம் கேட்டு தன் நினைவுகளிலிருந்து நிகழ்காலத்துக்கு வந்து கதவைத் திறந்தான்.

 

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Select your currency
INR Indian rupee
Scroll to Top